Saturday 27th of April 2024

English Tamil
Advertiesment


சங்காவுக்கு மேலும் ஓராண்டுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு


2020-05-07 7703

தற்போது உலகில் நிலவும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமது கழகத்தின் தலைவராக செயற்படும் இலங்கையின் குமார் சங்கக்காரவின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதற்கு இங்கிலாந்தின் மார்லிபோன் கிரிக்கெட் கழகம் (எம்.சி.சி.) விருப்பம் கொண்டுள்ளது.    

கிரிக்கெட்டின் சட்டவிதிகளை உருவாக்கும் இங்கிலாந்தின் மார்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார கடந்த ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி கடமையேற்றார்.

தற்போது சங்கக்கார தலைவர் பதவியை பொறுப்பேற்று 8 மாதங்கள் கடந்த நிலையிலையே அவரது பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதை  எம்.சி.சி. கழகம் விரும்புகிறது.

இவ்விடயம் குறித்த தீர்மானம் எதிர்வரும் ஜூன் மாதம் 24ஆம் திகதியன்று நடைபெறும் கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது எடுக்கப்படும் என்றும், இக்கூட்டத்தின்போது புதிய தலைவர் ஒருவரின் பெயரை முன்மொழிவது அல்லது தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிப்பது குறித்து தெரிவு செய்வதற்கான வாய்ப்பை குமார் சங்கக்காரவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எம்.சி.சி. தலைவர் பதவியானது பொதுவாக ஒருவருக்கு 12 மாதங்களுக்கு மாத்திரமே வழங்கப்படும். எனினும், உலகப் போர் போன்ற சில முக்கிய சந்தர்ப்பங்களில் எம்.சி.சி. கழகத்தின் தலைவர் பதவி ஓராண்டுக்கு மேல் நீட்டிக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

எனவே, குமார் சங்கக்கார மார்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் விருப்பத்துக்கமைய தலைவர் பதவியை மேலும் ஓராண்டுக்கு நீடிப்பாராக இருந்தால், அது வரலாற்று சம்பவமாக பதிவாகும்.

எம்.சி.சி. கழகத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதல் பிரித்தானியர் அல்லாத நபராகவும் வரலாற்றில் பதிவானதுடன், கடந்த ஆறு மாதங்களாக குமார் சங்கக்காரவின் ஆளுகைக்குள் வந்த எம்.சி.சி. கழகம் கிரிக்கெட் விளையாட்டை முன்னேற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை சர்வதேச அளவில் மேற்கொண்டு வருகின்றது.

இந்த முயற்சிகளில் முக்கிய ஒரு நகர்வாக, குமார் சங்கக்கார தலைமையிலான மார்லிபோன் கிரிக்கெட் கழகம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீளக் கொண்டு வரும் நோக்கில் பாகிஸ்தானில் மேற்கொண்ட கிரிக்கெட் சுற்றுப்பயணம் சிறந்த உதாரணமாகும் என்பதில் ஐயமில்லை.
 

Advertiesment